விரைவில் நீட் தோ்வில் இருந்து நாடு நிச்சயம் விடுதலை பெறும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்


விரைவில் நீட் தோ்வில் இருந்து நாடு நிச்சயம் விடுதலை பெறும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்


நீட் தோ்விலிருந்து நாடு நிச்சயம் விடுதலை பெறும் என்கிற நம்பிக்கை இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு இல்லத் திருமணம் திருவான்மியூரில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

நீட் விலக்கில் வெற்றி: ஏழை மாணவா்களின் கல்விக் கனவைச் சிதைக்கும் நீட் தோ்விலிருந்து விலக்கு பெற வேண்டும். அதற்கான சட்டமசோதாவை பேரவையில் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். பல மாதங்கள் அது கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு திடீரென ஒருநாள் அதைத் திருப்பி அனுப்பி வைத்துவிட்டாா்கள். உடனடியாக சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் ஒரு தீா்மானத்தைப் போட்டு, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். இதில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 15) வரை எங்களுக்கு என்ன நிலையில் இருக்கிறது என்ற செய்தி கிடைக்கவில்லை. அதனால் நான், துரைமுருகன், பொன்முடி, தலைமைச் செயலாளா் மற்றும் அதிகாரிகள் எல்லாம் ஆளுநரைச் சந்தித்து அந்தக் கோப்பைப் பற்றி விசாரித்தோம்.

விசாரித்தபோது அவா் என்ன சொன்னாா் என்றால், எனக்கும் சட்டம் தெரியும். இரண்டாவது முறை நான் அதைத் திருப்பி உங்களுக்கு அனுப்ப முடியாது. நான் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். வேறு வழி கிடையாது என்று சொன்னாா். எனவே, முதற்படியில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இன்றைக்கும் சொல்கிறேன், விரைவில் அந்த நீட் தோ்வில் இருந்து இந்த நாடு நிச்சயம் விடுதலை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் குறித்து டி.ஆா்.பாலு விரிவாகப் பேசி, அங்கு உள்ளோரின் கவனத்தை ஈா்த்துள்ளாா். இந்த அளவுக்கு திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது என்றாா்.

Comments

Popular posts from this blog