நேஷனல் ஹெரால்டு வழக்கு- ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கிடுக்குப் பிடி விசாரணை! 155005072


நேஷனல் ஹெரால்டு வழக்கு- ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கிடுக்குப் பிடி விசாரணை!


 

டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பான விசாரணைக்காக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லி அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகினர். முன்னதாக இன்றைய விசாரணைக்கு எதிராக டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்களுடன் அமலாக்கப் பிரிவு அலுவலகம் வரை பிரமாண்ட பேரணியையும் ராகுல் காந்தி நடத்தினார். இதனால் டெல்லி அமலாக்கப் பிரிவு அலுவலகம் முன்பாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தடுக்க பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

நேஷனல் ஹெரால்டு வழக்கு என்ன?

அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் என்பது நாட்டின் விடுதலைக்கு முன்னர் பண்டித ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இப்பத்திரிகை நஷ்டத்தில் இயங்கியதால் அதன் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ90 கோடி கடன் கொடுத்தது. ஆனாலும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. பின் 2010-ல் அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. இந்நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா, ராகுல் வசம் உள்ளன. இந்த பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக எம்.பி. சுப்பிரமணியசுவாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் இதில் அன்னிய செலாவணி மோசடி நடந்துள்ளதாக கூறி அமலாக்கத்துறையும் வழக்கு தொடர்ந்தது.

 

சோனியா, ராகுலுக்கு சம்மன்

இது தொடர்பாக ஜூன் 8-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக, சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியது. சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் வேறு ஒரு தேதியில் ஆஜராக அவகாசம் கேட்டிருந்தார். அதேபோல் ராகுல் காந்தி, வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் அவரும் அவகாசம் கோரி இருந்தார். இதனையடுத்து ராகுல் காந்தி இன்று ஆஜராக புது சம்மன் அனுப்பியது அமலாக்கப் பிரிவு. சோனியா காந்தி வரும் 23-ந் தேதி ஆஜராக புதிய சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

 

அமலாக்கப் பிரிவில் ஆஜரான ராகுல்

இதனை ஏற்றுக் கொண்ட ராகுல் காந்தி, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பு இன்று ஆஜரானார். முன்னதாக மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி அமலாக்கப் பிரிவு அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றார். இந்த பேரணியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த பேரணியை போலீசார் தடுக்க முயன்ற இடங்களில் போலீசாருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராகுல் காந்தி இன்று ஆஜராவதை முன்னிட்டு அமலாக்கப் பிரிவு அலுவலகம் முன்பாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

 

ராகுலிடம் சரமாரி கேள்விகள்

விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்தியின் வாக்குமூலத்தை 2 அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர். இந்த விசாரணையில், அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கும் யங் இந்தியாவுக்குமான தொடர்பு? யங் இந்தியாவில் ராகுல் வகிக்கும் பொறுப்பு? யங் இந்தியா நிறுவனத்தில் ராகுல் வைத்திருக்கும் பங்குகள்? எதற்காக காங்கிரஸ் கட்சி கடன் கொடுக்க முடிவு செய்தது? ஏன் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டது? என்பது உள்ளிட்ட ஏராளமான கேள்விகளை அமலாக்கப் பிரிவு அதீகாரிகள் ராகுல் காந்தியிடம் கேட்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog